Friday 12 August 2011

என் மகளின் நிலா கதை


இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மகள் என் மனைவியிடம் சொன்ன கதையாம் இது...

இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் வெளியே நின்று விண்ணை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் உள்ளே வந்து என் மனைவியிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறாள்....

நிலவை ரசித்துகொண்டிருந்தவள் நிலவு மேகத்துக்குள்ளே மறைந்து போனவுடன் “அம்மா அம்மா அந்த நிலா ஏன் மேகத்துக்குள் போச்சுன்னு தெரியுமாஎன்று கேட்டாளாம். தெரியவில்லை சொல் என்று என் மனைவி சொன்னதற்கு. “மழை பேயுது வீட்டுக்கு உள்ளே வான்னு அவங்க அப்பா கூப்பிட்டாராம். அதான் அந்த நிலா வீட்டுக்குள் போயிடுச்சுன்னுசொன்னாளாம். அம்மா எங்கே என்று என் மனைவி கேட்ட்தற்கு. “உள்ளே சமைச்சுகிட்டு இருக்காங்கன்னு சொன்னாளாம்.

இதை நேற்று அவளது சித்தியிடம் சொன்னாராம் என் மனைவி. அவளது சித்தி “இன்னைக்கி நிலா தெரியுதேன்னுகேட்டாராம். அதற்கு பதிலாக “ இன்னைக்கு அதோட அப்பா வெளியே நின்னு வேடிக்கை பாருன்னு சொல்லிட்டாராம்என்று சொல்லியிருக்கிறாள்.

நிலவை குழந்தையாகவும், மேகத்தை வீடாகவும் பார்க்க யார் அவளுக்கு கற்று தந்தார்கள்.

இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.

மீண்டும் அவளை சொல்லச் சொன்னால். “அப்படி இல்லப்பா அது. அந்த நிலா வீட்டுக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்துதா. அந்த மேகம்தான் அவங்க அப்பா. அவர் வந்து நிலாவை வா வீட்டுக்கு போகலாம்னு கூட்டிகிட்டு போயிடுச்சுஎன்று புது விளக்கம் சொல்கிறாள். மேகமில்லாத மறுநாளுக்கான கதையை கேட்டால் “நேத்துதான் வேடிக்கை பார்க்கலையே இன்னைக்கு பார்த்துக்கோன்னு நிலாவோட அப்பா மேகம் விட்டுடுச்சுன்னு விளக்கம் கூறுகிறாள்

குழந்தைகளை எண்ணி வியப்பதா... இல்லை அவர்களை ரசிப்பதா... இல்லை அவர்களிடம் இருந்து கற்று கொள்வதா...