Friday 27 July 2012

மீண்டும் சந்திக்கும் வரை

கை காட்டிக் கொண்டே செல்லும்
கணவனை
கண்ணீர் மறைத்தாலும்
துடைக்க மறந்து
நகர்ந்து போகவும் முடியாமல்
போன வழியே பார்த்து நிற்கும்
மனைவி...

அப்பா
என சத்தம் கிழிக்க
கையசைக்கும் மகனின் நேசம்
கெட்டியாக அவன் அனுப்பிய முத்த்த்தை
பிடித்துக் கொண்ட அந்த தந்தை
எத்தனை பொய் சொன்னரோ
அவனை சமாதானம் செய்ய
அவன் கை முழுதும் சாக்லேட்டுகள்
நாளை காலை
கண்டிப்பாய் தேடுவான் அப்பாவை
அவன் அம்மா அடிக்கையில்...

ஆசைகள் போல் அல்லவே
எடுத்துச் செல்லும் அளவுகள்
அதிகமானதால்
புலம்பலுக்கிடையே சுமையை குறைக்கும்
அப்பாவும் அம்மாவும்
பீதியுடன் அந்தப் பக்கம் மகள்...

வெள்ளைத் தோலே ஆனாலும்
முகப் பூச்சிகளையும்
சிவப்பு இதழ்களேயானாலும்
இதழ் சாயங்களும்
சற்று அதீதமாகவே
அப்பிக் கொண்ட
மஞ்சள் கருப்பு சிவப்பு
என பல வண்ண தேவதைகள்
அவர்களுக்கிடையே
அலங்கார நடை பயிலும்
ஒய்யார ஆண்களுமாய்...

அவள் முகத்தையும்
அந்த மிரட்சியையும்
பார்த்தாலே தெரிகிறது
அவள் ஒரு பெண் குருவி
அவனது கிசுகிசு கட்டளைகள் வேறு
பணமும் பசியும்
என்னவெல்லாம் செய்கிறது
செய்யச் சொல்கிறது
கோவமில்லை ஆதங்கம்தான்...

இவை அத்தனைக்கும் நடுவே
யுகங்கள் கடந்து
இந்த காதலுக்கு மட்டும்
அதே ஈர்ப்பு
இன்னமும் தொடர்கிறது
எங்கு சென்றாலும்
தனியாய் எனக்கு தெரிகிறது...

கொஞ்சலும் கெஞ்சலும்
இடுப்பில் குத்துவதும்
நடுவில் தடுக்கும்
அந்த இரும்பு கம்பிகளை
தாண்டி ஒன்றாகிட்த் துடிக்கும்
இறுக்கமான அணைப்புமாய்...

கொஞ்சலுடன்
கருப்புக் கண்ணாடிக்குள்
தெரியாமல் வழியும் கண்ணீரும்
விரல் தீண்டலும்
தலை வருடலுமாய்
ஏக்கம் விரியும்
எதிரே கொல்லத் துடிக்கும்
நீண்ட பிரிவு...

எதையும் மாற்றிடாது
இந்த திருட்டு முத்தம்
ஆனால் அந்த தீண்டல் தந்த
ஈரவெப்பம்
கண்டிப்பாய் மருந்திடும்
மீண்டும் சந்திக்கும் வரை...


ஒவ்வொரு விமானம் புறப்படும் போதும்
எத்தனை எத்தனை
பிரிவுகளும் உணர்ச்சிகளும்
காட்சிகளாய்...

Saturday 21 July 2012

செய்தித்தாளும் கருப்பு பாலித்தீன் தாளும்


இது என்ன காதலோ
காலை நடுவே
இரண்டும்
பேசிக்கொண்டிருப்பது போலவே கிடக்கின்றன
ஒரு பழைய செய்தித்தாளும்
ஒரு கருப்பு பாலித்தீன் தாளும்...

இரண்டுக்கும் இடைய நிறைய சமபாஷனைகள்
லேசாக வீசும் காற்றில்
இரண்டுக்கும் ஒரு சின்ன குதூகுலம்
மெல்லக் கூத்தாடுகின்றன
மேலெழுந்து பறக்கின்றன்
ஆடி அசைகின்றன
கை கோர்த்து நடக்கின்றன...

நகரத்தின் சாலை உயிர்பித்தது
தங்களை மறந்து மனிதர்களும்
அவர்களை சுமந்து வாகனங்களும்
அவசர அவசரமாய்
புழுதியாய் புயலைக் கிளப்பிக் கொண்டு...

இவை இரண்டும்
அல்லோலப்படுகின்றன
அலைக்கழிக்கப்படுகின்றன
மேலே பறந்தும்
கீழே தவழ்ந்தும்
தப்பிக்கத் தவிக்கின்றன...

வேகமாய கடந்து செல்லும்
மாநகர பேருந்துகளும்
காற்றுக்கும் இடைவெளி விடாத
இரு சக்கர வாகனங்களும்
சிதறடிக்கின்றன...

ஆய்ந்து ஓய்ந்து
தரை சேரும் நேரம்
சக்கரத்தில் சிக்கி
சீரழிந்து போனது
செய்தித்தாள்
தப்பிப் பிழைத்து
ஓரம் ஒதுங்கிய
கருப்பு பிளாஸ்டிக் தாளோ
குப்பைத் தொட்டிக்கு அருகில்
காத்துக்கிடக்கிறது...

Wednesday 11 July 2012

இரவு நேரக்கூலிகள்


லேசாக எட்டிப் பார்க்கும் சூரியனின் ஒளிக்கீற்றுகள்
எங்கோ கேட்கும் பேப்பர்காரனின் சைக்கிள் சத்தம்
தெருவில் பால்காரரின் மணியோசை
அரிதாகிப் போய்கொண்டிருக்கும் காகங்களின் கரைச்சல்
அப்பாவின் காலை நேர பூஜை
அம்மாவின் சமையல் சப்தமும் வாசமும்
பக்கத்து வீட்டின் மழலையின் பாலுக்கு அழும் குரல்
நாளின் வருகையை அறிவிக்கின்றன
எனக்கு மட்டும் தாலாட்டாகின்றன
பொருளாதாரத்தின் அவசியங்களுக்காக
இந்தியாவின் இரவு நேரக்கூலிகளில்
நானும் ஒருவன்...