Friday 25 May 2012

மணற் கோவிலின் கோபுரம்


வழக்கத்தைவிட
சற்று அதிகமாகவே
ஆரவாரம் செய்கிறாள்
மகிழ்ச்சியா கோவமா
சற்று நேரத்தில்
புரிய வைப்பாள்...

வரும் வழியில்
எட்டிப் பார்த்த
அந்த குட்டி பெண்
எனக்களித்த புன்னகை
இயற்கையின் பரிசாக
நான் இன்னமும்
அந்த மயக்கத்தில்...

யாரோ வரைந்து வைத்த
இதயத்தை
அழிக்க மனமில்லாமல்
வந்து வந்து போகிறாள்
அலை
அவர்களின் பெயர்களை
படித்துக்கொண்டே..

கட்டி வைத்த
கோட்டை ஒன்று
நான் விடைபெறும் வரை
உறுதியாய் நிற்கிறது
உடைக்க வேண்டாமென
அவளிடம் சொல்லிவிட்டு போயிருப்பார்கள் போலும்...

இரண்டு ஜோடி கால் தடங்கள்
மாறி மாறி
அலையின் ஈரத்தில்
ஆழமாய் பதிந்து
இன்னமும் அழியாமல் அழகாக...

விளையாட்டாய்
என்னை தொட வந்து
ஓடிப் போய் ஒளிந்துகொள்ளும்
பழக்கம் அவளுக்கு
சீண்டல்களுக்காய்
நான் காணாத நேரத்தில்
பாய்ந்து வர
நானும் தாண்டி ஓட
கட்டி வைக்கப்பட்ட
மணற் கோவிலின் கோபுரம்
என் காலில் இடிந்தது
கட்டி வைத்த
குழ்ந்தை மனம்
என்னை மன்னிக்குமா...

சோளம் சுடும்
தீப்பொறிகள்
கடல் காற்றின் வேகத்தில்
கூட்டாக நடனமாடி
கோலம் போடுகின்றன...

இருள் இருக்கும் தைரியத்தில்
பெண்களும்
கடல் தழுவிக்
கொள்கின்றனர்
இருளின் நிழலில்
நீர் வரைந்த அங்கங்கள் யாவும்
மோகம் சொட்டும் சிலைகளாக...


விடை பெற திரும்பி பார்த்தால்
என்னை
உள்ளுக்குள் இழுத்து வைத்துக் கொள்ளும்
வேகத்தோடு வருகிறாள்
இரவு அழைப்பதால்
விட்டு ஓடுகிறேன்
வருகையில் வரவேற்ற
கருவாட்டு வாசத்தைகூட மறக்கச் செய்யும்
மீன் வருவலின் வாசத்தையும்
தாண்டி ஓடுகின்றேன்
இரவுக்குள் மறைகின்றேன்
அவள் கண்களிலிருந்து...