Sunday 27 November 2011

விட்டில் பூச்சியாய்


நான் யார்
என்னை நானே
கேட்டுக் கொள்ளும் கேள்வி
என்னை நானே
மறந்து போய்விட்ட காலங்கள்
வெகு தூரத்தில்
நான் மட்டும் தனியாக
இது மயக்கமா
இல்லை தெளிவா...

வந்த இடம் தெரியாமல்
போகும் இடம் புரியாமல்
கேள்விகளுக்கு உள்ளே
பதில்களை தேடுகிறேன்...

என் புத்தகங்களின் பக்கங்களை
புரட்டிப் பார்க்கின்றேன்
நிறையவே எழுதி இருக்கிறது
பதில்களும் இருக்கின்றன
விளக்கங்களைத்தான் காணவில்லை...

விழிக்கு வழி சொல்ல
ஏற்றி வைத்த
விளக்கின் ஒளியில்
நானே
விட்டில் பூச்சியாய்
மாய்ந்து போகிறேன்...

Thursday 17 November 2011

அத்தனை கோபம்


அத்தனை கோபம் எனக்கு
யார் மேலே
எதன் மேலே
எதனாலே
எதுவும் தெரியவில்லை
ஏதும் புரியவுமில்லை...

நிறையவே இருந்தது
கண்ணையும்
கருத்தையும் உறுத்திய
பல விஷயங்களில்
எனக்கு வலி தந்தவை
என்னை பார்த்து
ஏளனமாய் சிரித்தவை...

அத்தனை கோபமும்
ஒரு சேர
ஒரே அடியில்
இறங்கியது
உடல் சிதைந்து
குலைந்து குழைந்து
அந்த உயிர் உதிரம்
பல தூரம் தெரித்தது
அத்தனை கோபமும்
ஒரு சேர
கையில் கடித்த
அந்த கொசுவின் மீது...

கொசு மடிந்தது
கோபம்...

தீராத கனவுகள்


தொட்டுத் தொடரும்
தீராத கனவுகள்
நமக்கான செய்திகளா
நம்மை குழப்பி
உள்ளே இழுத்து
மறக்கடிக்கச் செய்து
குழம்பிய நம்மை
வெளியே துப்பி
மிரட்டும் கனவுகளே...

அந்த 5அடி பெண்ணின்
முழங்கால் தொடும் 4அடி கூந்தல்
அதன் நுனியில்
ஈரம் சொட்டுவதை
ரசித்துகொண்டே
பயணித்தேன்...

மெல்லத் தலைசாய்த்து
கண் மூட
பரந்த காடு
கண் முன்னே விரிந்தது
பசுமையான மரங்கள்
ஈரத்தை பூசிக் கொண்டு
அழகாக...

அதோ அந்த வண்ண
புள்ளி மான்
அங்குமிங்குமாக துள்ளிக் குதித்து
பசியாறி விளையாடியிருக்க
பாய்ந்து வந்தது
ஒரு அம்பு...

வந்த திசையில்
வாட்டசாட்டமாய் அவன்
வேடன்
கம்பீரமாய் குதிரையில்
வில்லேந்தி கூர்மையாய்...

அம்புக்கு தப்பி
புள்ளி மான்
துள்ளிக் குதித்தோடியது
உயிர் பயத்தோடு...

கண்ணில் சிக்கியபின்
விடுவேனா என்றவனும்
வேகமாக விடாமல்
துரத்திக் கொண்டு
அம்பெய்கிறான்...

வேகமாகவும் லாவகமாக
வளைந்து நெளிந்து
அத்தனையும் தவிர்த்து
அதன் ஓலம் அசரீரியாய்...

அடேய்
என் வயிற்றில் இருக்கும் சிசு
இந்த கானகம் பார்க்க வேண்டும்
அந்த குரல்
அத்தனை சத்தமாய்
பாவமாய்
நான் கண் விழித்தேன் துணுக்குற்று
மனம் முழுதும் பாரமாய்...

காலை என்னவள்
என்னை எழுப்பிய போது இருந்த
மறைந்த கனவு தந்த
அதே பாரம்...

அந்த காலை கனவில்
அத்தனை பேர் துரத்த
நான் தூக்கிக் கொண்டு ஓடிய
அந்த சிறுவனின்
சோகம்
இந்த புள்ளி மானும் கொண்ட்தோ...

காப்பாற்ற நான் ஓடுகிறேன்
வேக்மாக ஓடுகிறேன்
வாகனங்களை தாண்டி
வேகமாக ஓடுகிறேன்
ஓடிக்கொண்டிருக்கையில்
யாரோ என் தோள் தொட
திடுக்கிட்டு திரும்பினால்
தூக்கம் கலைத்து
என் மனைவி
என் முன்னால்
போகலையா என்ற கேள்வியுடன்...

தீராத அந்த தூக்கமும்
தொடரும் அந்த பாரமும்
சேர்ந்து கொண்ட பாரமும்
4 அடி கூந்தலை பர்த்து கொண்டே
மீண்டும் கண் மூடிகிறேன்
அந்த புள்ளி மான்
என்ன ஆனதோ???
நான் ஓடுகிறேன்...

Saturday 12 November 2011

நான் என்ன காம இயந்திரமா


விலை கொடுத்தா
வாங்கி வந்தாய்
புணர்ந்து முடித்து
உதறிப் போகின்றாய்...

வியர்வை முத்துக்கள்
இனிப்பாக்க
தென்றல் வேண்டும்
நீயோ
உன் புழுக்கம் போக்க
எழுந்து போகின்றாய்
எனக்கும் புழுங்குகிறது...

காமமும் மோகமும்
காதல் இல்லாதபோது
வலிக்கிறது...

நான் என்ன இயந்திரமா
உன் தீண்டலுக்கு இயைந்து இயங்கிட
பின்
உன் வேட்கை தணிந்ததும்
நின்று போக...

நடுவிலே ஆரம்பித்து
நடுவிலேயே முடிந்தும் விடுகிறது
என் வேட்கை மட்டும்
கோபமாக தொடர்கிறது...

இதமாய் ஒரு முத்தம்
சுகத்தின் சோர்வில்
உன் மார்பில் தஞ்சம்
தாம்பத்யத்தில்
இதை வேண்டுவதும்
தவறா....

உனக்கும் உன் காமத்திற்கும்
என்னை கேட்காமலேயே
என்னை எடுத்துக்கொள்கிறாய்
நேசமில்லாமல்
மறுக்க முடியாமல்
நான்...

எனக்கான வேட்கையை
நான் யாரிடம் கேட்டு
தணித்துக் கொள்ள
கேட்கும் உரிமைகூட
இழந்து நான்...

Friday 11 November 2011

எனது கீச்சுகள் - 2

எட்டி எட்டி பார்த்துவிட்டு போகும் உன் நினைவுகள் உன்னை என்னிடம் மீண்டும் கூட்டி வந்து விட்டு விட்டு போகிறது...

குடும்பத்தின் சின்ன சின்ன சந்தோஷங்களை துறந்து குடும்பத்திற்காக பணம் பண்ணும் இயந்திரமாக மட்டுமே மாறிப் போன துர்பாக்கியசாலிகள் ஆண்கள்...

எழுதிவிட்டு மீண்டும் படித்து பார்க்கின்றேன்... எத்தனை முறை முயன்றாலும் உன்னைவிட அழகாக ஒரு கவிதையை என்னால் எழுத முடியவில்லை...

நீ என்னுடன் இல்லாத வேளைகளில் மட்டும் உறக்கக் கத்திவிட்டு கல்லறையில் போய் படுத்துக்கொள்ள வரம் வேண்டும்..   

முத்தத்தின் வழியே முழுதாய் என்னை விழுங்கிப் போகின்றாய் என் ராட்சசியே...

ஓவென்று வாய்விட்டு ஒரு அழுகை... பிறகு நல்ல தூக்கம்... துக்கமோ பாரமோ என்னை தாக்கும்போதெல்லாம் எனக்கு கை கொடுக்கும் இருவர்...   

நான் மட்டும் போதும் எனக்கு... நான் என்னை கை பிடித்து முன்னெடுத்து செல்கின்றேன்...

வளைவுகளில் விழுந்து வீழ்த்துகிறேன்...  

போர்வைக்கு வியர்க்கிறது.. 

Thursday 10 November 2011

எனது கீச்சுகள் - 1

கனவுகள் அங்கே பாய் விரித்து காத்திருக்கின்றன... நான் வந்து இமை மூட வேண்டுமாம்...


என்னை விட்டு யார் போனாலும் நான் கவலை கொள்ளப் போவதில்லை... நீ என்னை விட்டு போன வலி என்னோடு இருப்பதனால்...

உனக்கு எப்படியோ தெரியாது... எனக்கு உன் பெயர்தான் மிகவும் இனிமையான வார்த்தை... உன் பெயர் கொண்டவர்களை என் தோழிகளாக்கி கொள்கின்றேன்...

உயிர்த்தெழும் நேரங்களில் எல்லாம் உன் மூச்சுக் காற்றுதான் எனக்கு சுவாசம் தருகிறது...

நிகழ்காலத்துக்குள் ஓடி வந்துவிடுங்கள்.. எதிர்காலத்துக்குள் நுழைந்த உங்களை கொல்ல அந்த காலன் துரத்தி வருகிறான்...

ஆண்கள் சோகங்களை சொல்வதில்லை பெண்கள் சொல்லாமல் விடுவதில்லை.. 

அடங்கிப் போகக்கூடாது என்றால் அத்துமீறுவது அன்று அர்த்தமோ இன்றைய பெண்களுக்கு... மன்னிக்கவும் வருத்தமாக இருக்கிறது...

கூண்டில் அடைக்கப்பட்டவைகள்தான். இருந்தாலும் அந்த குருவிகளின் கீச்சுகள் இனிமையாகத்தான் இருக்கின்றன. பாடுகின்றனவா, அழுகின்றனவா, திட்டுகின்றனவா     

மழையில் நடக்கத்தான் வெளியே வந்தேன். நீங்கள் வாரி இரைக்கும் சேற்றில் குளிக்க அல்ல... வாகன ஓட்டிகளே கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்...

கையில் குடை இருக்கிறது.. இருந்தும் மழையில் நனைந்துகொண்டே நடக்க சொல்கிறது மனது...