Monday 18 July 2011

அர்த்தமில்லாத விளக்கங்களில்


அர்த்தமில்லாத விளக்கங்களில்
நுழைந்து வரும் வாக்கியங்கள்..
உணர்ச்சியற்ற எண்ணங்களில்
குடிபுகுந்த வார்த்தைகள்..
ஏதுமறியா நிலையினிலே
வலுவிழந்த எழுத்துக்கள்..
எங்களை
அனர்த்தனமாக்கும் முன்
அர்த்தமாக்கிக் கொள்கிறோம்

இங்கே வீரியம் அதிகம்


பிறப்புறுப்பு விலக்கி
தலைகுப்புற விழ
தின்னம் கொண்ட என்னால்
நெல் உமியின்
கூர் மழுங்கச் செய்ய முடியவில்லை....
சீமை பால்
சுரக்கச் செய்ய
வல்லமை படைத்த எனக்கு
எருக்கம் பாலின்
விஷம் முறிக்கத் தெரியவில்லை...
உறவாகிப் போன
யாருக்காவது கேட்கிறதா
அழுகையாகிப்போன என் உறுமல்...
என் உயிருக்கு காரணமானவனே
உன்னை தப்பாமல்
அமுது மொழியில்
அப்பா என்றழைப்பேன்
உன் சோகம் தீர
என் வெள்ளை சிரிப்பு
உன் தாயிடம்
நீ இழந்த முத்தங்கள்
என்னால் மட்டும்தான் தர முடியும்
என் பிஞ்சுக் கைகளின் அணைப்பில்
அமைதி கொடுப்பேன்
என்னை இந்த கூட்டில்
விட்டுவிடுங்கள்...
நான் பட்டுப் பாவாடை கேட்க மாட்டேன்
சமைஞ்ச நேரத்தில்
சீர் ஏதும் கேட்க மாட்டேன்
கல்யாணம் செய்யும்
அவசியமும் தரமாட்டேன்
காதல் என் மோகத்தை தீர்க்கட்டும்
என் உயிரை
என்னோடு விட்டுவிடுங்கள்...
இங்கே வீரியம் அதிகம்
என்னை கொல்லாதீர்கள்

Friday 8 July 2011

ஆதியும் அந்தமும்


ஆதியும் அந்தமும் இல்லாமல்
அந்தரத்தில் ஒரு தள்ளாட்டம்...
முதலுக்கும் முடிவுக்கும்
நடுவே ஒரு போராட்டம்.....
காற்றில்லாத வனாந்தரத்தில்
யாருமில்லாத ஆரவாரம்.....
வட்ட வட்டமாய் வளையங்களும்
நீண்டு கொண்டே போகும் பாதைகளும்
எங்கே இட்டுச் செல்கின்றன......
வேலும் வில்லும் காக்கவில்லை
அறையப்பட்ட ஆவி தோன்றவில்லை
ஒருவரேயானாலும் ஏதும் நடக்கவில்லை....
வராத மழைக்காக
கருகிப் போகும் நாற்றாங்கால்கள்

Tuesday 5 July 2011

வலிக்கிறது எனக்கு


உயர உயர என் மீது
வாய் பிளந்து
நான் பார்த்திருக்கையில்
என் அடி வயிற்றில்
வேகமாய் இறங்கும்
இந்த இயந்திரங்கள்
வலிக்கிறது எனக்கு...
என் அருமை பிள்ளையே
என்னதான் இன்னமும் தேடுகிறாய்
என்னுள்
என் வயிற்றுக்குள்...
தண்ணீர் கொடுத்தேன்
கணிமங்கள் கொடுத்தேன்
எரிபொருள் கொத்தேன்
எரிவாயுவும் கொடுத்தேன்
இன்னமும் எத்தனை
ஓட்டைகள் போடுவாய்
இன்னமும்
எத்தனை பெரிதாய்     
எத்தனை ஆழமாய்
என்னை கிழிப்பாய்
நீயும் என் பிள்ளைதான்...
நீ வசிக்கத்தான்
இத்தனை பெரிய
கூடு கொடுத்தேன்
என்னை தோண்டித்தான்
வீடு கட்ட வேண்டுமா...
உன் கை கொண்டு கிழுத்தவரை
உன் தீண்டலின்
சுகமாவது மிஞ்சியது
இந்த ராட்சஸ
இயந்திரங்களின்
கீரல்களும் உராய்வுகளும்
வலிக்கின்றன...
எல்லா உயிர்களும்
என் பிள்ளைகள்
அவர்களுடையதும் அவர்களும்
உனக்கே வேண்டும் என்பது
நியாயமா...
அடேய்
என்னுள்ளும் கோபம் இருக்கிறது
இனியும் ஆழம் வேண்டாம்
சாம்பலாகி விடுவாய்
அமைதியாய் ஓடும்
இரத்த குழம்புகள்
வெடித்துவிடுவேன்
எரிமலையாய்...
உன்னை விட
என் எரிமலைகளுக்கு
பாசம் அதிகம்