Saturday 28 January 2012

காற்றில் கரைந்துவிடும் முன்


வெளியே -
பறக்கின்ற கூந்தலை
ஒதுக்கிவிட்டுப் போகும்
அந்த தேவதை
என் கறபனைக்கு
இறக்கை கட்டிவிட்டு போகின்றாள்...

உள்ளே -
கண்ணாடியில்
தெரியும் உன் பிம்பத்தில்
என் கன்னம் சேர
நான் தலை சாய்க்கின்றேன்...

இசையாய் இனிமையாய்
பாரதிராஜாவின் கற்பனையில்
இளையராஜாவும் வைரமுத்துவும்
வெள்ளை தேவதைகளை
உன் பின்னே ஆட விடுகின்றனர்...

எங்கோ பார்க்கின்றேன்
என நீ
சரியாகவே இருக்கும்
மாராப்பை சரிசெய்ய
அந்த அவஸ்தையை
நான் ரசித்துக்கொண்டிருந்த
உன் கண்ணில் ரசிக்கின்றேன்...

மூக்குத்தியாய்
உதட்டின்மீது மின்னும்
அந்த ஒற்றை
மச்சம்
போக விடாமல்
என் பார்வையை
இழுத்து பிடிக்கிறது...

நான் ரசிப்பதை
ஒரப்பார்வையால் நீ ரசிப்பதை
உன் இதழோரம் பூக்கும்
அந்த குறும்புப் புன்னகை
எனக்கு சொல்லிவிட்டது
இதை அறிந்த
உன் பார்வையோ
ஓடி ஒளிகிறது...


நீ
உன் ரோஜா இதழை
ஈரப்படுத்துவதை நான் ரசிக்கையில்
தொண்டையில் சிக்கிக்கொண்ட எச்சிலை
விழுங்காமல்
உமிழ்ந்திடுவாயோ என பயந்து
என் பார்வையை
கொஞ்சம் தள்ளி வைக்கின்றேன்
உன்னைவிட சுட்டியாய்
அருகில் இருக்கும் அந்த மழலைமீது...

கண்ணாலே போய் வருகிறேன்
என நான் சொன்னது
உன் கண்களுக்கு கேட்டதா...

உன்னால் வந்த
இந்த வார்த்தைகள்
காற்றில் கரைந்துவிடும் முன்
ஓடி வருகின்றேன்
என் கீபோர்டுக்குச் சொல்லி
உன்னை
வரைந்து வைக்க வேண்டும்
கவிதையாய்
நாளைக்கும் எடுத்து ரசிக்க...