Friday 28 October 2011

அதோ இறந்து கிடக்கும் என்னை


அதோ இறந்து கிடக்கும் என்னை
எட்டி நின்று பார்க்கின்றேன்
ஏதும் புரியாமல்
என் புன்னகை மட்டும் மாறாமல்
எல்லோரும்
என்னை சுற்றி
ஒப்பாரிகள்
அதோ
என்னை பெற்றவர்கள்
அழுகையூடே
தங்களின் பாசத்தை புலம்பிக் கொண்டு
மாறாத என் புன்னகை
மெல்லக் கரைகிறது
திக்குத் தெரியாமல்
மூலையில் என்னவள்
என்ன செய்வாள் இனி
நான் தூங்குவதாய்
சிணுங்களோடு சிரித்துகொண்டே
என்னை எழுப்புகிறாள்
என் தாயான
என் மகள்
அத்தனை புன்னகையும்
காணாமல் போனது
அதோ இறந்து கிடக்கும்
என்னை பார்த்து
நான் அழுகிறேன்
  
முன்னர் பல முறை
நான் இறந்திருக்கிறேன்
என் சுயம் இழந்த
ஒவ்வொரு முறையும்
நான் இறந்துபோயிருக்கிறேன்
அத்தனை முறையும்
என்னோடு நான் இருந்தேன்
மீண்டும் புதிதாய் பிறந்தேன்...

இது நான் தனியாக
என்னை அங்கே விட்டுவிட்டு
இது நிரந்தரம்
நிஜம் சுடுகிறது...

முடிந்தே விட்டது
அத்தனை பலத்தையும்
ஒன்றாய் சேர்த்து
விழித்து எழுகின்றேன்
தட்டி எழுப்புகிறாள்
என் தாயானவள்
அத்தனை கனவும் கலைந்து
நிஜம் எதிரில் நிற்கிறது
நான் சிரிக்கின்றேன்
வெல்வேன் இனி
இறப்பின் வலி அறிந்தவனாய்...

Thursday 13 October 2011

அந்த வெள்ளை காகிதங்களில்


ஏதேதோ எண்ணங்கள்
எங்கெங்கோ பறந்து சென்று
அங்கங்கே ஒட்டிக் கொண்டு
மீண்டும் எடுக்க வராமல்
பிசினி போல...

நிலையற்ற வாழ்வு
நிறைய வலியோடு
முடித்து கொள்ளலாம் என்றால்
கடமைகள் பல
வரிசையில் வந்து
இழுத்து பிடித்து
முடிவுக்கும் வழியில்லாமல்...

காலன் வருவதற்குள்
படித்து முடித்துவிட வேண்டும்
எனற அவசரத்தில்
வேகவேகமாய் புரட்டுகின்றேன்
ன் வாழ்க்கை பக்கங்களை...

நாற்பது வருட கடமைகளை
நாலு நிமிடத்தில் படித்து
நாலு மணி நேரத்தில்
செய்தும் முடித்து
நிம்மதியாய்
படுத்து உறங்க
வழி தேடுகின்றேன்...

என் காலப் பக்கங்களில்
அவசரத்தில் கிறுக்கப்பட்டவை
காலியாக இருக்கின்றன
செய்வதறியாமல்
அந்த வெள்ளை காகிதங்களில்
புதையுண்டு
செயலற்று நிற்கின்றேன்...

சீக்கிரம் என்கிறான் காலன்
முடியாது என்கிறது காலம்
நடுவில் நான்
தேங்கிப்போய்...

ஏக்கம்...(ஹைக்கூ)

பசும்பால் குடிக்கும்
குழந்தையை
ஏக்கமாய் பார்க்கும்
கன்று..

Tuesday 4 October 2011

நான் இருக்கிறேன்


அர்த்தம் புரியாத
உன் வார்த்தைகளே
எனக்கு ஆறுதல் மொழியானது...

இரவின் நிசப்தத்தில்
உன் பிஞ்சு விரல்களால்
என் கண்ணம் வருடுகிறாய்
தோள் தட்டுகிறாய்
நான் தூங்கிப் போகின்றேன்...

என் கைகள் மேல்
உன் கைகளை வைத்து
அழுந்தச் சொல்கின்றாய்
“நான் இருக்கிறேன்என்று...

பல நேரங்களில்
நீயல்ல
நான்தான் பிடித்திருக்கின்றேன்
உன் விரல்களை...

உனக்கு நானா
எனக்கு நீயா
கலங்கி நிற்கும் வேளைகளில்
தெளிவாய் சிரிக்கின்றாய்...

என்னை பயமுறுத்திய
அந்த தனிமை
உன்னால் கரைந்து போகின்றது...

அன்பாய் அழகாய்
அமைதி கொள்கின்றேன்
உன்னாலே
உன்னுள்ளே...