Saturday 11 June 2011

உணர்வுகளை கழட்டி


இன்று கொள்ளி வைத்து
நாளை பால் ஊற்றி
பதினைந்தாம் நாள் காரியம் செய்து
வருடம் ஒன்று ஆனதும் திதி கொடுத்து
அம்மாவாசைதோறும் பிண்டம் வைக்கும்
சராசரி தமிழன் நான்...
எனக்காக உடல் கிழித்த
உதிரம் ஊட்டிய
என் அன்னைக்கே
இவ்வளவுதான் செய்ய முடியும்
என் தொப்புள்கொடி உறவுகளுக்கு மட்டும்...
கொத்து கொத்தாய் கொன்றான்
என் இனப் பெண்டுகள்
சிதைக்கப்பட்டனர்
எங்குப் பார்க்கினும்
உடல்களும் சதைகளும் உதிரமும்
சிதறிக் கிடக்கின்றன
எல்லாம் முடிந்த பின்னும்
துன்பங்கள் தீரவில்லை
கேள்விகளும் முடியவில்லை..
எல்லாம் தெரிகிறது
வருத்தங்கள் தொடர்கிறது
கோபமும் தெரிக்கிறது
வழிதான் தெரியவில்லை...
எனது இறப்பிற்கே
என்னால்
இறங்கற்பா மட்டும்தான் பாட முடிகிறது...
என் கையை வெட்டினாலுமே
சிரித்து சகித்து வாழ
பழக்கப்பட்டிருக்கிறோம்
ஈழத்து உறவின் ஆவிகளே
மிச்சமிருக்கும் தண்டிக்கப்பட்டவர்களே
நான் வாழ்வதே
ஒரு அடிமை வாழ்க்கை...
உணர்வுகளை கழட்டி
உறையில் வைத்துவிட்டு
உடல் வளர்க்க கிளம்பிவிட்டேன்....

Thursday 9 June 2011

அழகாய் ஒரு விருந்தாளி


அழகாய்
ஒரு விருந்தாளி
எப்போதோ பார்க்கும் தும்பி என்பதால்
சற்று ரசித்து இருந்துவிட்டேன்
நாக்கை குழைத்துக் கொண்டு வருகின்றான்
விடாக்கண்டன்
மழைக்கு முன்னே வரும்
விட்டில் பூச்சிகளுக்கே
வாலை ஆட்டிக்கொண்டு
விருந்துண்ண வந்துவிடுவான்
எப்போதோ கிடைக்கும் தும்பி என்பதால்
வேகமாய் வருகிறேன்
மனசு படபடக்க
விளக்கின் மேல்
ஒய்யாரமாய் உட்கார்ந்து இருக்கும்
தும்பிக்கு கை அசைக்கிறேன்
வலிக்குமோ என்று
துண்டால் வீசியும் துரத்தினேன்
என் மனம் அறிந்தானோ
வேகமாய் வந்துவிட்டான்
கண் இமைக்கும் நேரத்தில்
என் எண்ணத்தையும் தாண்டி
நாக்கால் லாவகமாய்
இழுத்துக் கொண்டான்
மெல்ல ருசித்து விழுங்குவதை
அழகாய் சிலிர்த்த இறகுகள் மறைவதையும்
வண்ணம் குடி கொண்ட வால் காணாமல் போவதையும்
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ விருந்தாளி
அவன் பல்லி என் அறைத்தோழன்

எல்லாம் நீயானாய்


எல்லாம் நீயானாய்
என் நன்றும் நீ
என் தீதும் நீ
என் வெற்றியும் நீ
என் தோல்வியும் நீ
என் ருத்ரமும் நீ
என் சாந்தமும் நீ
என் அன்பும் நீ
என் கோபமும் நீ
என் காதலும் நீ
என் காமமும் நீ
என் அழகும் நீ
என் அசிங்கமும் நீ
என் அமைதியும் நீ
என் அகங்காரமும் நீ
என் உயிரும் நீ
என் உடலும் நீ
என் உள்ளமும் நீ
என் உருவமும் நீ
என் எண்ணமும் நீ
என் செயலும் நீ
எல்லாம் நீயானாய்
சர்வமும் நீயானாய்
உன் உயிர் இழந்தேன்
உன் முன்னே சிலையானேன்
உனை மறந்தேன்
எனை இழ்ந்தேன்
மெல்ல அசைந்து ஆடுகின்றாய்
ஆனந்த தாண்டவம் ஆடுகின்றாய்
என்னை மறக்கச் செய்கின்றாய்
என்னை ஆட்டுவிக்கின்றாய்

Monday 6 June 2011

மற்றவைகளில் சொன்னவை சில...

காலை தூக்கத்தில்
என் கையை இழுத்து
உன் தலையணையாக்கி
நீ தூங்குவது
ஞாயிற்றுக் கிழமைகளின் சந்தோசங்களில் ஒன்று...

என் போர்வைக்குள் புகுந்து
என் மார்பை
உன் படுக்கையாக்கிக் கொண்டு
என்னோடு சேர்ந்து
நீ தூங்கிப்போகும் சுகம்...

என் முதுகில்
ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு
போர்வை நுணியால்
காதில் சிலிர்க்கவைக்கிறாய்...

ஒன்றுக்கு
இரண்டாய் முத்தமிடுகின்றாய்
என் கன்னத்தை
கிள்ளி தின்னும் காட்சி...

நீ தூங்குவதை
நான் ரசிப்பது
என்னை மழலையாக்கி
நீ மகிழ்வது...

தலைவருடினால்
சுருண்டு
என் மார்போடு ஒட்டிக் கொள்கிறாய்...

உன் பொம்மைகளை அடுக்கி
எனக்கு கதைகள் சொல்லி
விளக்கங்கள் கேட்கிறாய்...

சிரித்து சிரித்து
என்னையும் சிரிக்க வைக்கிறாய்
நேற்றைய துயரங்களை மறக்கிறேன்...

கை சூப்பியதற்கும்
உன் நட்போடு சண்டையிட்டதற்கும்
மன்னிப்பு கேட்டு மிரள வைக்கிறாய்...

தூங்குவதாய் பசாங்கு செய்து
என் கண்களுக்கு திரை போட்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்...

கட்டி பிடித்து
சண்டை போட்டு
உன்னை ஜெயிக்க விட்டு...

கை கோர்த்து
கற்றில் வேகமாய் வீசி
என்னை நட்த்தி வருவாய்...

ஆடுவாய்
அசைந்து ஆடுவாய்
என்னையும் ஆட வைப்பாய்...

உதட்டு சத்தத்தில்
ஆட்டோ ஓட்டி
பல்லிடுக்கில் என் விரல் கடித்து
என் அசட்டு வலிக்கு
தடவிக் குடுத்து
விரலில் முத்தமிட்டு...

மற்றவைகளில்
சொன்னவை சில...

இன்று ஞாயிற்றுக்கிழமை
நாளை நீ விழிக்கும் முன்னே
இரை தேட
நான் பறந்து விடுவேன்
அடுத்த ஞாயிறுக்காக காத்திருபேன்
உன்னைப் போலவே....