Thursday 18 July 2013

விற்காத பூக்கள்...

’வீட்டுக்கு இரண்டு முழம் வாங்கிப் போய்யா ராசா’
உரிமையாய் கிழவியின் குரல்
பசிக்குத்தான் என்றாலும்
நேசம் மறுப்பதற்கில்லை...

மல்லிகை வாசம்
திரும்பிப் பார்த்தால்
வேகமாய் தொடுக்கும்
விரல்களின் ஓரத்தில்
ரணமாய் வலிக்கும்...

மொட்டுக்கள் பூ விற்கின்றன
கூடவே
உதிர்ந்தவை
உலர்ந்தவை
கசங்கியவை
எல்லாமே மனிதர்கள்தாம்

விற்றுவிட வேண்டிய
அவசர அவசியத்திற்கு
விலை வீழும்
பசி தொடரும்...

விற்பவளின் பசிக்கு உணவாகாத
விற்காத பூக்கள்
புண்ணியம் செய்தவை
மறுநாள் காலையில் 
இறைவனுக்கு இலவச மாலையாகும்....