Saturday 24 March 2012

எச்சில் ஈரம் காயாத


எப்பொழுதோ கடித்த காக்கா கடியின்
எச்சில் ஈரம் காயாத
கடலை மிட்டாய்
இன்னமும் மிச்சம் இருக்கிறது
நினைவுகளாய்...

தத்தி தத்தி
குரங்கு பெடல் அடித்து
சைக்கிள் கற்கும் ஆர்வத்தில்
முட்டிகளில் காயங்களின் அடையாளங்கள்
வலிகளை தரவில்லை அன்று
இன்றும் தழும்புகளாய்...

எத்தனை முறை
காயம் பட்டாலும்
உடனே மருந்தாகிப் போவது
நேசம் கலந்த உன் எச்சில்தானே...

என் பம்பரத்திற்கு மட்டும்
காயம் படாமல்
பம்பரம் விடும் உன் கரிசனமும்
பேய் பந்தில்
உனக்கு வலிக்காமல்
அடித்து விளையாடும் லாவகமும்
யாரும் போதிக்காமல்
நட்பை வளர்த்தன...

கை கோர்த்து
தோள் சேர்த்து
ஒன்றாய் குளித்து
என இயற்கை எங்கள் நட்புக்கு சாட்சியாய்
எத்தனை காட்சிகளை
படம் பிடித்து வைத்திருக்கிறதோ
என் நினைவுகளும்...

நேசம் இருந்தாலும்
நிசப்தம்
சிறு சிறு சம்பவங்களை அடுக்கி
சுவர் எழும்பி நிற்கிறது
தட்டி விடும் தைரியத்திற்காக காத்திருக்கிறேன்...