Thursday 26 June 2014


கல்லறைகளும் காலியில்லை

வாழ்வதற்குதான் வீடு கிடைக்காமல் இருந்தது
இப்போதெல்லாம்
கல்லறைகளிலும் இடம் கிடைப்பதில்லை
ஊர்விட்டு ஊர் போய்
இடம் பிடிக்கின்றன இறந்து போன உடல்கள்...

புதைக்கப்பட்டவர்களில்
அமிழ்ந்து போனவை பல
உயரமாய் கட்டப்பட்டவைகள் மட்டும்
எழுந்து நிற்கின்றன... 

காணாமல் போனது மனிதர்கள் மட்டுமல்ல
காலடிகளில் காலப் போக்கில்
கல்லறைகளும்தான்...

காய்ந்து போன மலர்களும்
மிச்சமிருக்கும் மெழுகுகளும்
சாய்ந்து நிற்கும் சிலுவையும்
பல வலிகளுக்கும்
உப்பு கரிக்கும் கண்ணீருக்கும் சாட்சியாகின்றன...

அழிந்து போன கல்லறைகளுக்கு நடுவே
அலங்கரிக்கப்பட்டிருக்கும் சில
ஆடம்பரமாய் ஆர்பரிக்கின்றன...

ஒரே மாதிரி 
வெள்ளை சிலுவையோடு வரிசையாய் 
பெயரிடப்படாத அந்த மூன்று கல்லறைகளும்
ஒரே கல்லறைகளுக்குள் உறங்கும்
ஒரு மாதமேயான அக்கா தம்பியும்
என்னவோ சொல்கின்றன...

Wednesday 1 January 2014

வண்ணம் தீட்டப்படாத யானை



அவசர அவசரமாய்
முடிந்தேவிட்டது அரையாண்டு விடுமுறை…

பாதி வரைந்த காந்தி படமும்
தும்பிக்கைக்கு வண்ணம் தீட்டப்படாத யானை படமும்
சித்திரைவரை பாட்டி வீட்டு பரணில் காத்திருக்கனும்…

அடைகாக்க ஆரம்பித்த கருப்பு கோழி
இன்னமும் குஞ்சு பொறிக்கவில்லை
அடுத்த வாரம் பாட்டியிடம் போனில் கேட்கனும்…

பக்கத்து வீட்டு வேப்பங் கிளையில்
மாட்டிக் கொண்ட பட்டத்தை
பத்திரமாய் எடுத்து வைக்கச் சொல்லனும்…

தோட்டத்தில் தெற்கு மூளையில்
நட்டு வைத்த மாங்கொட்டை
நேற்றுதானே மண் முட்டியது முளைத்திருக்குமா..

பாட்டி வீட்டிற்கு வந்தால் மட்டும்
இந்த விடுமுறைகள்
நிறைய மிச்சம் வைக்கின்றன…