Thursday 18 July 2013

விற்காத பூக்கள்...

’வீட்டுக்கு இரண்டு முழம் வாங்கிப் போய்யா ராசா’
உரிமையாய் கிழவியின் குரல்
பசிக்குத்தான் என்றாலும்
நேசம் மறுப்பதற்கில்லை...

மல்லிகை வாசம்
திரும்பிப் பார்த்தால்
வேகமாய் தொடுக்கும்
விரல்களின் ஓரத்தில்
ரணமாய் வலிக்கும்...

மொட்டுக்கள் பூ விற்கின்றன
கூடவே
உதிர்ந்தவை
உலர்ந்தவை
கசங்கியவை
எல்லாமே மனிதர்கள்தாம்

விற்றுவிட வேண்டிய
அவசர அவசியத்திற்கு
விலை வீழும்
பசி தொடரும்...

விற்பவளின் பசிக்கு உணவாகாத
விற்காத பூக்கள்
புண்ணியம் செய்தவை
மறுநாள் காலையில் 
இறைவனுக்கு இலவச மாலையாகும்....

Monday 4 March 2013

அமைதியாகிப் போன அலைபேசி



காத்திருந்த அழைப்புகள் ஏதும்
இப்போதெல்லாம் வருவதில்லை...
வெட்கப் படவைக்கும்
காதலிகளின் கொஞ்சல் சிணுங்கல்கள்
இனி எப்போதுமேயில்லை...
காசு கேட்டு தொந்தரவு செய்யும்
எரிச்சலூட்டும் கடன்கார்ர்கள்
அழைக்கப்போவதில்லை...
நேரம்காலம் இல்லாமல் அழைக்கும்
மேலாளரின் இம்சைகள்
இல்லவே இல்லை...
இப்படியாய் எப்போதும்
அலறிக்கொண்டிருக்கும் அலைபேசி
இதோ இப்போது
அமைதியாய்
அவனைப்போலவே சலனமற்று
எப்போதாவது வரும்
அழைப்பிற்கு மட்டும்
யாரோ பதில் சொல்கிறார்கள்
அவன் இறந்துவிட்டான்...

அமைதியாகிப் போன கைப்பேசி



காத்திருந்த அழைப்புகள் ஏதும்
இப்போதெல்லாம் வருவதில்லை...
வெட்கப் படவைக்கும்
காதலிகளின் கொஞ்சல் சிணுங்கல்கள்
இனி எப்போதுமேயில்லை...
காசு கேட்டு தொந்தரவு செய்யும்
எரிச்சலூட்டும் கடன்கார்ர்கள்
அழைக்கப்போவதில்லை...
நேரம்காலம் இல்லாமல் அழைக்கும்
மேலாளரின் இம்சைகள்
இல்லவே இல்லை...
இப்படியாய் எப்போதும்
அலறிக்கொண்டிருக்கும் அலைபேசி
இதோ இப்போது
அமைதியாய்
அவனைப்போலவே சலனமற்று
எப்போதாவது வரும்
அழைப்பிற்கு மட்டும்
யாரோ பதில் சொல்கிறார்கள்
அவன் இறந்துவிட்டான்...

Monday 4 February 2013

மரித்துப் போனவை



மரித்துப் போய்விட்டன
மாந்தோப்பு தந்த
தரை தொடும்
ஊஞ்சல் கிளைகள்

கால் நக்கிக் கொண்டே
உடன் சுற்றி வரும்
பெயர் வைக்காத
வளர்ந்த நாய் குட்டி

நாய் குட்டிக்கு
துணையாக எப்போதும் திண்ணையில் இருக்கும்
மூளை வளர்ச்சி குன்றிய
சித்தப்பாவின் அழகிய சிரிப்பு

வண்ணத்தை நிரப்பிய
கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்
வாசத்தை வீசிய
மல்லிகையும் சம்பங்கியும்
அதில் அந்த குண்டு மல்லிகை தனிரகம்

நீர் இரைக்கும் இன்ஜினில்
தனியாக வரும் சுடுநீர் குளியல்

எத்தனை உயரம் வளர்ந்தாலும்
என் கல்லடிக்கு பயந்து பழம் தந்த
கொடுக்காய்ப்புளி மரம்

நிலவு பார்த்த
மொட்டை மாடி உறக்கங்கள்

எதற்கு என் புரியாமல்
நடுக்கூட்த்தில்
ரசித்த பெரிய ஸ்டார்கள்

சின்ன பாட்டிதான்
என்னை பிடிக்காதுதான்
இருந்தாலும்
தீபாவளிக்கு அவர் சுடும்
கருப்பு அதிரசம்

அனைத்திலும் இறுதியாய்
மரித்துப் போனது
என் பாட்டன்
எனக்கே எனக்காக மட்டும்
வாங்கி வரும் 100கிராம் பொட்டலம்

தனியாக அந்த
மோட்டார் கொட்டகையும்
அதற்கு நிழல் தந்துகொண்டு
அந்த புதிய
ஒற்றை மாமரமும்...