Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 26 June 2014

கல்லறைகளும் காலியில்லை

வாழ்வதற்குதான் வீடு கிடைக்காமல் இருந்தது
இப்போதெல்லாம்
கல்லறைகளிலும் இடம் கிடைப்பதில்லை
ஊர்விட்டு ஊர் போய்
இடம் பிடிக்கின்றன இறந்து போன உடல்கள்...

புதைக்கப்பட்டவர்களில்
அமிழ்ந்து போனவை பல
உயரமாய் கட்டப்பட்டவைகள் மட்டும்
எழுந்து நிற்கின்றன... 

காணாமல் போனது மனிதர்கள் மட்டுமல்ல
காலடிகளில் காலப் போக்கில்
கல்லறைகளும்தான்...

காய்ந்து போன மலர்களும்
மிச்சமிருக்கும் மெழுகுகளும்
சாய்ந்து நிற்கும் சிலுவையும்
பல வலிகளுக்கும்
உப்பு கரிக்கும் கண்ணீருக்கும் சாட்சியாகின்றன...

அழிந்து போன கல்லறைகளுக்கு நடுவே
அலங்கரிக்கப்பட்டிருக்கும் சில
ஆடம்பரமாய் ஆர்பரிக்கின்றன...

ஒரே மாதிரி 
வெள்ளை சிலுவையோடு வரிசையாய் 
பெயரிடப்படாத அந்த மூன்று கல்லறைகளும்
ஒரே கல்லறைகளுக்குள் உறங்கும்
ஒரு மாதமேயான அக்கா தம்பியும்
என்னவோ சொல்கின்றன...

Wednesday, 1 January 2014

வண்ணம் தீட்டப்படாத யானை



அவசர அவசரமாய்
முடிந்தேவிட்டது அரையாண்டு விடுமுறை…

பாதி வரைந்த காந்தி படமும்
தும்பிக்கைக்கு வண்ணம் தீட்டப்படாத யானை படமும்
சித்திரைவரை பாட்டி வீட்டு பரணில் காத்திருக்கனும்…

அடைகாக்க ஆரம்பித்த கருப்பு கோழி
இன்னமும் குஞ்சு பொறிக்கவில்லை
அடுத்த வாரம் பாட்டியிடம் போனில் கேட்கனும்…

பக்கத்து வீட்டு வேப்பங் கிளையில்
மாட்டிக் கொண்ட பட்டத்தை
பத்திரமாய் எடுத்து வைக்கச் சொல்லனும்…

தோட்டத்தில் தெற்கு மூளையில்
நட்டு வைத்த மாங்கொட்டை
நேற்றுதானே மண் முட்டியது முளைத்திருக்குமா..

பாட்டி வீட்டிற்கு வந்தால் மட்டும்
இந்த விடுமுறைகள்
நிறைய மிச்சம் வைக்கின்றன…

Thursday, 18 July 2013

விற்காத பூக்கள்...

’வீட்டுக்கு இரண்டு முழம் வாங்கிப் போய்யா ராசா’
உரிமையாய் கிழவியின் குரல்
பசிக்குத்தான் என்றாலும்
நேசம் மறுப்பதற்கில்லை...

மல்லிகை வாசம்
திரும்பிப் பார்த்தால்
வேகமாய் தொடுக்கும்
விரல்களின் ஓரத்தில்
ரணமாய் வலிக்கும்...

மொட்டுக்கள் பூ விற்கின்றன
கூடவே
உதிர்ந்தவை
உலர்ந்தவை
கசங்கியவை
எல்லாமே மனிதர்கள்தாம்

விற்றுவிட வேண்டிய
அவசர அவசியத்திற்கு
விலை வீழும்
பசி தொடரும்...

விற்பவளின் பசிக்கு உணவாகாத
விற்காத பூக்கள்
புண்ணியம் செய்தவை
மறுநாள் காலையில் 
இறைவனுக்கு இலவச மாலையாகும்....

Monday, 4 March 2013

அமைதியாகிப் போன கைப்பேசி



காத்திருந்த அழைப்புகள் ஏதும்
இப்போதெல்லாம் வருவதில்லை...
வெட்கப் படவைக்கும்
காதலிகளின் கொஞ்சல் சிணுங்கல்கள்
இனி எப்போதுமேயில்லை...
காசு கேட்டு தொந்தரவு செய்யும்
எரிச்சலூட்டும் கடன்கார்ர்கள்
அழைக்கப்போவதில்லை...
நேரம்காலம் இல்லாமல் அழைக்கும்
மேலாளரின் இம்சைகள்
இல்லவே இல்லை...
இப்படியாய் எப்போதும்
அலறிக்கொண்டிருக்கும் அலைபேசி
இதோ இப்போது
அமைதியாய்
அவனைப்போலவே சலனமற்று
எப்போதாவது வரும்
அழைப்பிற்கு மட்டும்
யாரோ பதில் சொல்கிறார்கள்
”அவன் இறந்துவிட்டான்”...

Monday, 4 February 2013

மரித்துப் போனவை



மரித்துப் போய்விட்டன
மாந்தோப்பு தந்த
தரை தொடும்
ஊஞ்சல் கிளைகள்

கால் நக்கிக் கொண்டே
உடன் சுற்றி வரும்
பெயர் வைக்காத
வளர்ந்த நாய் குட்டி

நாய் குட்டிக்கு
துணையாக எப்போதும் திண்ணையில் இருக்கும்
மூளை வளர்ச்சி குன்றிய
சித்தப்பாவின் அழகிய சிரிப்பு

வண்ணத்தை நிரப்பிய
கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்
வாசத்தை வீசிய
மல்லிகையும் சம்பங்கியும்
அதில் அந்த குண்டு மல்லிகை தனிரகம்

நீர் இரைக்கும் இன்ஜினில்
தனியாக வரும் சுடுநீர் குளியல்

எத்தனை உயரம் வளர்ந்தாலும்
என் கல்லடிக்கு பயந்து பழம் தந்த
கொடுக்காய்ப்புளி மரம்

நிலவு பார்த்த
மொட்டை மாடி உறக்கங்கள்

எதற்கு என் புரியாமல்
நடுக்கூட்த்தில்
ரசித்த பெரிய ஸ்டார்கள்

சின்ன பாட்டிதான்
என்னை பிடிக்காதுதான்
இருந்தாலும்
தீபாவளிக்கு அவர் சுடும்
கருப்பு அதிரசம்

அனைத்திலும் இறுதியாய்
மரித்துப் போனது
என் பாட்டன்
எனக்கே எனக்காக மட்டும்
வாங்கி வரும் 100கிராம் பொட்டலம்

தனியாக அந்த
மோட்டார் கொட்டகையும்
அதற்கு நிழல் தந்துகொண்டு
அந்த புதிய
ஒற்றை மாமரமும்...

Friday, 14 December 2012

கனவுகள்


கனவுகள் கற்பனையா
நினைவில் நின்றுவிட்ட
நிஜங்களின் தொடர்ச்சியா...

கனவுகள் பல கருப்பாய் இருக்கிறது
சில வெள்ளையாக தெரிகிறது
பல கருப்பு வெள்ளையாக விரிகிறது
வண்ணக் கலவை கொண்டும்
பல தீட்டப்படுகின்றன...

அவற்றில் பல அங்கேயே நின்று விடுகிறது
சில விழித்த பின்னும் தொடர்கிறது
சிலையாக நிற்கும் கனவுகள் உண்டு
திரைகாட்சியாகவும் சில ஓடுகின்றன...

முகம்கூட அறிந்திராத பெண்ணுடன்
புணர்ந்து எழுந்து
அவள் யாரென யோசித்து யோசித்து
மீண்டும் உறங்கிப் போகிறேன் கனவுக்குள்...

அடிக்கடி என்னை நிர்வாணாமாக்கி
ஓட விடுவதில்
என் கனவுக்கு அத்தனை ஆசை
என்னை விரட்டி வருபவர்களில்
நானே இருந்திருக்கிறேன்...

பயந்து விட்டு விலக முடியாமல்
தூக்கம் கலைத்த
கனவுகள் பல
எத்தனை முறை முயன்றிருக்கிறேன்
அங்கிருந்து நிஜத்திற்கு ஓடிவந்துவிட...

சுகமாகவும் இதமாகவும்
இன்னும் வேண்டும் என கேட்டு
கண்கள் திறக்க விடாமல்
திறந்தால் தொலைந்துவிடுமோயென
கற்பனையாய் தொடர்ந்த கனவுகள் பல
எத்தனை முறை விரும்பியிருப்பேன்
அங்கேயே இருந்துவிட....