Thursday 9 June 2011

அழகாய் ஒரு விருந்தாளி


அழகாய்
ஒரு விருந்தாளி
எப்போதோ பார்க்கும் தும்பி என்பதால்
சற்று ரசித்து இருந்துவிட்டேன்
நாக்கை குழைத்துக் கொண்டு வருகின்றான்
விடாக்கண்டன்
மழைக்கு முன்னே வரும்
விட்டில் பூச்சிகளுக்கே
வாலை ஆட்டிக்கொண்டு
விருந்துண்ண வந்துவிடுவான்
எப்போதோ கிடைக்கும் தும்பி என்பதால்
வேகமாய் வருகிறேன்
மனசு படபடக்க
விளக்கின் மேல்
ஒய்யாரமாய் உட்கார்ந்து இருக்கும்
தும்பிக்கு கை அசைக்கிறேன்
வலிக்குமோ என்று
துண்டால் வீசியும் துரத்தினேன்
என் மனம் அறிந்தானோ
வேகமாய் வந்துவிட்டான்
கண் இமைக்கும் நேரத்தில்
என் எண்ணத்தையும் தாண்டி
நாக்கால் லாவகமாய்
இழுத்துக் கொண்டான்
மெல்ல ருசித்து விழுங்குவதை
அழகாய் சிலிர்த்த இறகுகள் மறைவதையும்
வண்ணம் குடி கொண்ட வால் காணாமல் போவதையும்
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ விருந்தாளி
அவன் பல்லி என் அறைத்தோழன்

2 comments:

Post a Comment