Saturday 21 July 2012

செய்தித்தாளும் கருப்பு பாலித்தீன் தாளும்


இது என்ன காதலோ
காலை நடுவே
இரண்டும்
பேசிக்கொண்டிருப்பது போலவே கிடக்கின்றன
ஒரு பழைய செய்தித்தாளும்
ஒரு கருப்பு பாலித்தீன் தாளும்...

இரண்டுக்கும் இடைய நிறைய சமபாஷனைகள்
லேசாக வீசும் காற்றில்
இரண்டுக்கும் ஒரு சின்ன குதூகுலம்
மெல்லக் கூத்தாடுகின்றன
மேலெழுந்து பறக்கின்றன்
ஆடி அசைகின்றன
கை கோர்த்து நடக்கின்றன...

நகரத்தின் சாலை உயிர்பித்தது
தங்களை மறந்து மனிதர்களும்
அவர்களை சுமந்து வாகனங்களும்
அவசர அவசரமாய்
புழுதியாய் புயலைக் கிளப்பிக் கொண்டு...

இவை இரண்டும்
அல்லோலப்படுகின்றன
அலைக்கழிக்கப்படுகின்றன
மேலே பறந்தும்
கீழே தவழ்ந்தும்
தப்பிக்கத் தவிக்கின்றன...

வேகமாய கடந்து செல்லும்
மாநகர பேருந்துகளும்
காற்றுக்கும் இடைவெளி விடாத
இரு சக்கர வாகனங்களும்
சிதறடிக்கின்றன...

ஆய்ந்து ஓய்ந்து
தரை சேரும் நேரம்
சக்கரத்தில் சிக்கி
சீரழிந்து போனது
செய்தித்தாள்
தப்பிப் பிழைத்து
ஓரம் ஒதுங்கிய
கருப்பு பிளாஸ்டிக் தாளோ
குப்பைத் தொட்டிக்கு அருகில்
காத்துக்கிடக்கிறது...

No comments:

Post a Comment