Thursday, 5 April 2012

கண்ணீர்


தனிமை
என்னை கட்டிக் கொள்ள
எட்டிப் பார்க்கிறது..

தனியாய்
கட்டி அணைக்க யாருமற்று
கண்ணீர் துடைக்க கைகளற்று
கண்ணீர் கொண்டு என் சோகங்களை
கழுவிக்கொண்டிருக்கிறேன்...

இந்த கண்ணீர் துளிகள்
சின்னதாய் இருந்தாலும்
பெரிய மனது
என்னையும் சேர்த்து ஆறுதல் படுத்துகிறது...

செய்த தவறுகள் யாவும்
கண்முன்னே
கண்ணாடியில்லாமல்
பேருந்தின் ஜன்னல் காட்சிகளாய்
விரிந்து பரந்து
மாறிக்கொண்டே இருக்கின்றன
அனைத்திலும் நான்
கொடூரமான வில்லனாய்...

ஒவ்வொரு துளியும்
நான் கொடுத்த வலியை
சொல்லி சொல்லி
வலித்து விட்டு போகிறது...

இறந்து போகும் அவசரத்தில்
மனிதன் அழுவதன் ரகசியம்
இன்றுதான் புரிந்தது
அத்தனையும் கண் முன்னே வந்ததால்
கண்ணீரால் கழுவிக்கொள்கிறானோ...

Tuesday, 3 April 2012

பிண வாடை


சுற்றும் முற்றும் தேடுகின்றேன்
எங்கேயிருந்து வருகிறது
எனக்குப் பிடித்த அந்த
பிண வாடை...

திக்குத் தெரியாமல் இருட்டில்
பாதை மாறி
வந்து நின்ற இடமோ
சுடுகாட்டு வாயில்
உள்ளே ஒரு பிணம்
தனியாய் எறிந்துகொண்டிருக்கிறது...

எத்தனை நாள் ஆனது
நன்றாக உள்ளிழுத்து
இருத்திக் கொண்டேன்...

தனியே எறிந்துகொண்டிருந்த
அந்த சவம்
எனக்கு துணையாக
இடுக்காட்டு பாதையில்
என்னுடனே வந்து
என்னை இந்த
மனித காட்டுக்குள்
தள்ளிவிட்டு போனது...

இப்போது எனக்கு
பயமாய் இருக்கிறது...

Saturday, 24 March 2012

எச்சில் ஈரம் காயாத


எப்பொழுதோ கடித்த காக்கா கடியின்
எச்சில் ஈரம் காயாத
கடலை மிட்டாய்
இன்னமும் மிச்சம் இருக்கிறது
நினைவுகளாய்...

தத்தி தத்தி
குரங்கு பெடல் அடித்து
சைக்கிள் கற்கும் ஆர்வத்தில்
முட்டிகளில் காயங்களின் அடையாளங்கள்
வலிகளை தரவில்லை அன்று
இன்றும் தழும்புகளாய்...

எத்தனை முறை
காயம் பட்டாலும்
உடனே மருந்தாகிப் போவது
நேசம் கலந்த உன் எச்சில்தானே...

என் பம்பரத்திற்கு மட்டும்
காயம் படாமல்
பம்பரம் விடும் உன் கரிசனமும்
பேய் பந்தில்
உனக்கு வலிக்காமல்
அடித்து விளையாடும் லாவகமும்
யாரும் போதிக்காமல்
நட்பை வளர்த்தன...

கை கோர்த்து
தோள் சேர்த்து
ஒன்றாய் குளித்து
என இயற்கை எங்கள் நட்புக்கு சாட்சியாய்
எத்தனை காட்சிகளை
படம் பிடித்து வைத்திருக்கிறதோ
என் நினைவுகளும்...

நேசம் இருந்தாலும்
நிசப்தம்
சிறு சிறு சம்பவங்களை அடுக்கி
சுவர் எழும்பி நிற்கிறது
தட்டி விடும் தைரியத்திற்காக காத்திருக்கிறேன்...

Monday, 6 February 2012

வெட்டப்படும் கைகளும் நறுக்கப்படும் கால்களும்


எட்டிப் பிடித்து
குட்டைக்குள்ளிருந்து மேலெழ
மீண்டும் மீண்டும் நீண்டாலும்
மேலிருந்து
வெட்டப்படும் கைகள்
சிதறித் தெளித்து
கண்ணை மறைக்கின்றன...

இரத்தத் துளிகள்
எழுந்து நின்று
பாதை கடக்க
மீண்டும் மீண்டும் வளர்ந்தாலும்
நறுக்கப்படும் கால்கள்
உதிரமும் சதையும் சகதியாகி
உள்ளிழுக்கின்றன...

மடிந்து போன மனங்கள் யாவும்
என்னை தூக்கி விடவே நினைத்தாலும்
சிக்கிக் கொண்ட என் கால்கள்
நகர மறுக்கின்றன
அந்த இரத்தவாடை
பிடித்துப்போன மனமும்தான்...

முரண்பட்டு
முன்னேற முயற்சிக்கையில்
வெட்டப்பட்டு
இரத்தம் தோய்ந்து
வீழ்ந்து கிடக்கும்
என் கைகளே
என்னை எட்டிப் பிடித்து
உள்ளிழுக்கின்றன...

வெட்ட வரும் வாள்களை
பிடித்துக்கொண்டு
இழுத்து அழுத்த வரும் கைகளின்
மீதேறி
வழிந்து ஒழுகும் உதிரத்தை
துடைத்து எறிந்துவிட்டு
மேலெழுந்து நடக்க
மீண்டும் முயல்கிறேன்...
Anuradha Niketh https://www.facebook.com/anuradha.niketh இவரின் ஓவியம் ஒன்றால் தூண்டப்பட்ட எண்ணங்கள் இவை... 

The Painting can be found at https://www.facebook.com/photo.php?fbid=2880735372212&set=a.2880702251384.134547.10748

Saturday, 28 January 2012

காற்றில் கரைந்துவிடும் முன்


வெளியே -
பறக்கின்ற கூந்தலை
ஒதுக்கிவிட்டுப் போகும்
அந்த தேவதை
என் கறபனைக்கு
இறக்கை கட்டிவிட்டு போகின்றாள்...

உள்ளே -
கண்ணாடியில்
தெரியும் உன் பிம்பத்தில்
என் கன்னம் சேர
நான் தலை சாய்க்கின்றேன்...

இசையாய் இனிமையாய்
பாரதிராஜாவின் கற்பனையில்
இளையராஜாவும் வைரமுத்துவும்
வெள்ளை தேவதைகளை
உன் பின்னே ஆட விடுகின்றனர்...

எங்கோ பார்க்கின்றேன்
என நீ
சரியாகவே இருக்கும்
மாராப்பை சரிசெய்ய
அந்த அவஸ்தையை
நான் ரசித்துக்கொண்டிருந்த
உன் கண்ணில் ரசிக்கின்றேன்...

மூக்குத்தியாய்
உதட்டின்மீது மின்னும்
அந்த ஒற்றை
மச்சம்
போக விடாமல்
என் பார்வையை
இழுத்து பிடிக்கிறது...

நான் ரசிப்பதை
ஒரப்பார்வையால் நீ ரசிப்பதை
உன் இதழோரம் பூக்கும்
அந்த குறும்புப் புன்னகை
எனக்கு சொல்லிவிட்டது
இதை அறிந்த
உன் பார்வையோ
ஓடி ஒளிகிறது...


நீ
உன் ரோஜா இதழை
ஈரப்படுத்துவதை நான் ரசிக்கையில்
தொண்டையில் சிக்கிக்கொண்ட எச்சிலை
விழுங்காமல்
உமிழ்ந்திடுவாயோ என பயந்து
என் பார்வையை
கொஞ்சம் தள்ளி வைக்கின்றேன்
உன்னைவிட சுட்டியாய்
அருகில் இருக்கும் அந்த மழலைமீது...

கண்ணாலே போய் வருகிறேன்
என நான் சொன்னது
உன் கண்களுக்கு கேட்டதா...

உன்னால் வந்த
இந்த வார்த்தைகள்
காற்றில் கரைந்துவிடும் முன்
ஓடி வருகின்றேன்
என் கீபோர்டுக்குச் சொல்லி
உன்னை
வரைந்து வைக்க வேண்டும்
கவிதையாய்
நாளைக்கும் எடுத்து ரசிக்க...