Monday, 6 February 2012

வெட்டப்படும் கைகளும் நறுக்கப்படும் கால்களும்


எட்டிப் பிடித்து
குட்டைக்குள்ளிருந்து மேலெழ
மீண்டும் மீண்டும் நீண்டாலும்
மேலிருந்து
வெட்டப்படும் கைகள்
சிதறித் தெளித்து
கண்ணை மறைக்கின்றன...

இரத்தத் துளிகள்
எழுந்து நின்று
பாதை கடக்க
மீண்டும் மீண்டும் வளர்ந்தாலும்
நறுக்கப்படும் கால்கள்
உதிரமும் சதையும் சகதியாகி
உள்ளிழுக்கின்றன...

மடிந்து போன மனங்கள் யாவும்
என்னை தூக்கி விடவே நினைத்தாலும்
சிக்கிக் கொண்ட என் கால்கள்
நகர மறுக்கின்றன
அந்த இரத்தவாடை
பிடித்துப்போன மனமும்தான்...

முரண்பட்டு
முன்னேற முயற்சிக்கையில்
வெட்டப்பட்டு
இரத்தம் தோய்ந்து
வீழ்ந்து கிடக்கும்
என் கைகளே
என்னை எட்டிப் பிடித்து
உள்ளிழுக்கின்றன...

வெட்ட வரும் வாள்களை
பிடித்துக்கொண்டு
இழுத்து அழுத்த வரும் கைகளின்
மீதேறி
வழிந்து ஒழுகும் உதிரத்தை
துடைத்து எறிந்துவிட்டு
மேலெழுந்து நடக்க
மீண்டும் முயல்கிறேன்...
Anuradha Niketh https://www.facebook.com/anuradha.niketh இவரின் ஓவியம் ஒன்றால் தூண்டப்பட்ட எண்ணங்கள் இவை... 

The Painting can be found at https://www.facebook.com/photo.php?fbid=2880735372212&set=a.2880702251384.134547.10748

Saturday, 28 January 2012

காற்றில் கரைந்துவிடும் முன்


வெளியே -
பறக்கின்ற கூந்தலை
ஒதுக்கிவிட்டுப் போகும்
அந்த தேவதை
என் கறபனைக்கு
இறக்கை கட்டிவிட்டு போகின்றாள்...

உள்ளே -
கண்ணாடியில்
தெரியும் உன் பிம்பத்தில்
என் கன்னம் சேர
நான் தலை சாய்க்கின்றேன்...

இசையாய் இனிமையாய்
பாரதிராஜாவின் கற்பனையில்
இளையராஜாவும் வைரமுத்துவும்
வெள்ளை தேவதைகளை
உன் பின்னே ஆட விடுகின்றனர்...

எங்கோ பார்க்கின்றேன்
என நீ
சரியாகவே இருக்கும்
மாராப்பை சரிசெய்ய
அந்த அவஸ்தையை
நான் ரசித்துக்கொண்டிருந்த
உன் கண்ணில் ரசிக்கின்றேன்...

மூக்குத்தியாய்
உதட்டின்மீது மின்னும்
அந்த ஒற்றை
மச்சம்
போக விடாமல்
என் பார்வையை
இழுத்து பிடிக்கிறது...

நான் ரசிப்பதை
ஒரப்பார்வையால் நீ ரசிப்பதை
உன் இதழோரம் பூக்கும்
அந்த குறும்புப் புன்னகை
எனக்கு சொல்லிவிட்டது
இதை அறிந்த
உன் பார்வையோ
ஓடி ஒளிகிறது...


நீ
உன் ரோஜா இதழை
ஈரப்படுத்துவதை நான் ரசிக்கையில்
தொண்டையில் சிக்கிக்கொண்ட எச்சிலை
விழுங்காமல்
உமிழ்ந்திடுவாயோ என பயந்து
என் பார்வையை
கொஞ்சம் தள்ளி வைக்கின்றேன்
உன்னைவிட சுட்டியாய்
அருகில் இருக்கும் அந்த மழலைமீது...

கண்ணாலே போய் வருகிறேன்
என நான் சொன்னது
உன் கண்களுக்கு கேட்டதா...

உன்னால் வந்த
இந்த வார்த்தைகள்
காற்றில் கரைந்துவிடும் முன்
ஓடி வருகின்றேன்
என் கீபோர்டுக்குச் சொல்லி
உன்னை
வரைந்து வைக்க வேண்டும்
கவிதையாய்
நாளைக்கும் எடுத்து ரசிக்க...

Tuesday, 13 December 2011

என் பெயர் விபச்சாரி


அவன் என்னை
விட்டு விற்று சென்று
இன்றோடு ஒரு வருடம்
வலித்தது
கசந்தது
பழகிப் போனது
நானும் உணர்ச்சியாலான
இரத்தமும் உதிரமும் ஓடும் மிருகம்தான்
இப்போதெல்லாம்
சிலரால் சுகமாகவும் இருக்கிறது...

என் சுவற்றில்
கோடுபோட்டு வைத்த கணக்குப்படி
என் மீது படர்ந்திருக்கும் நீ
425ஆவது வாடிக்கையாளர்
நாள் கணக்கு விகிதாசாரப்படி பார்த்தால்
எனக்கு மதிப்பு
அதிகம்தான் போலும்

அந்த காம்புகளை
மட்டும் காயப்படுத்திவிடாதே
என் மகன்
அதில்தான் பாலுண்ண வேண்டும்...

Sunday, 27 November 2011

விட்டில் பூச்சியாய்


நான் யார்
என்னை நானே
கேட்டுக் கொள்ளும் கேள்வி
என்னை நானே
மறந்து போய்விட்ட காலங்கள்
வெகு தூரத்தில்
நான் மட்டும் தனியாக
இது மயக்கமா
இல்லை தெளிவா...

வந்த இடம் தெரியாமல்
போகும் இடம் புரியாமல்
கேள்விகளுக்கு உள்ளே
பதில்களை தேடுகிறேன்...

என் புத்தகங்களின் பக்கங்களை
புரட்டிப் பார்க்கின்றேன்
நிறையவே எழுதி இருக்கிறது
பதில்களும் இருக்கின்றன
விளக்கங்களைத்தான் காணவில்லை...

விழிக்கு வழி சொல்ல
ஏற்றி வைத்த
விளக்கின் ஒளியில்
நானே
விட்டில் பூச்சியாய்
மாய்ந்து போகிறேன்...