காலையில் எழுந்து
மதிய உணவு சமைத்து
உன்னை எழுப்பி
பால் குடுத்து
காப்பி குடித்து
குளிக்க வைத்து
பவுடர் பூசி
வாக்கு எடுத்து தலைவாரி
விநாடிகளை உறுவாக்கி
குளித்து உடை மாற்றி
உன்னை சிரிக்க வைக்க
இரண்டு முத்தம் கொடுத்து
இதற்கு இடையே
இட்லி அவித்து
வீடு பெருக்கி
துணி துவைத்து
உனக்கு விடித்த
சட்னி அரைத்து
உனக்கு ஊட்ட வேண்டி
நானும் உண்டு...
ஓட்டமும் நடையுமாய்
காலை நேரத்து ரம்மியங்களை புறந்தள்ளி
ரணமாக்கும் கண்களை தாண்டி
உன்னை பள்ளியில் விட்டு
நானும் பணிக்கு விழைகின்றேன்
ஆசையாய்
கற்றறிந்த திறமைகளை மறந்து
பணம் பண்ணும் இயந்திரமாய்
சலனமின்றி இயங்கி முடித்து
சொல்லடிகல்
கண்ணடிகள்
தீண்டல்கள்
வயதின் இம்சைகள்
அனைத்தையும்
உன் நினைவின்
சுகத்தால் தடுத்து
இன்னும் வேகமாய்
வீட்டிற்கு ஓடி வந்து
உன்னை அள்ளி அணைத்து
முகம் கழுவி
உனக்கு அழகாய் உடுத்தி
வீட்டுப் பாடம்
கண்டிப்புடன் சொல்லி முடித்து
உன்னுடைய விளையாட்டை
உன்னுடன் சேர்ந்து
நானும் விளையாடி
உனக்கு பசிக்கையில்
உனக்கு பிடித்த உணவை
ருசியாய் சமைத்து
உனக்கு ஊட்டி
இரண்டு கவளம் நானும் முழுங்கி
கதை சொல்லி
தாலாட்டி உன்னை தூங்கவைத்து
பின் எழுந்து சென்று
என் முகம் கழுவி
பாத்திரம் விலக்கி
என் செல்லம் உனக்காக
என்னிடம் கொஞ்சும்
உடல் வலியை மறந்து
அனைத்தையும்
முடித்து
படுக்கும் முன்னே
உறங்கிப் போய்
அலாரம் அடிக்கும் முன்னே
காலையில் எழுந்து....
இதில் எதுவும்
எனக்கு வலிப்பதில்லை
உன்னையும் என்னையும்
வேண்டாம் என்று போன
உன் தந்தையின்
நினைவுகளில்
நீ மூழ்கிப் போவதை பார்க்கையில்
எனக்கும் வலிக்கிறது
நானும் அழுகின்றேன்
தாயான நான்
இன்னும் முழுதாய்
தந்தையாகவில்லையோ???
உனக்காக
உன் நம்பிக்கைக்காக
உன் சிரிப்பிற்காக
உன் அமைதிக்காக
நான் இழந்தது எதுவும்
இழப்பாகவே தெரியவில்லை
இந்த உன்
ஏக்கத்தை தவிர....
நின்று நிதானமாய்
சிறகடித்து பறக்கும்
என் ரசனைகள்..
உனக்கான உழைப்பில் அழகாகிப்போன
என் வாலிபத்தின் சுகங்கள்..
எனது வரையறைக்குள்
என்னால் தேடிக்கொள்ள முடிந்த
இந்த உடலின் மோகத் தீண்டல்கள்...
இதமாய்
என் இதயத்தில்
நிரம்பி வழிந்த
அன்பு நட்புக்கள்...
எனக்கான ஆதரவுகளும்...
நானான அடையாளங்களும்..
இவையெல்லான்
இழப்புகளாய் தெரியவில்லை – உன்னாலே
ஆனால்
உனது இந்த ஏக்கம் –
என்னை நானே
இழந்துவிடுவேனோ???
2 comments:
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
எனது face book இல் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
@Rathnavel Sir,
மிக்க நன்றி....பகிர்தலுக்கும் நன்றி....
Post a Comment