Friday, 12 August 2011

என் மகளின் நிலா கதை


இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மகள் என் மனைவியிடம் சொன்ன கதையாம் இது...

இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் வெளியே நின்று விண்ணை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் உள்ளே வந்து என் மனைவியிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறாள்....

நிலவை ரசித்துகொண்டிருந்தவள் நிலவு மேகத்துக்குள்ளே மறைந்து போனவுடன் “அம்மா அம்மா அந்த நிலா ஏன் மேகத்துக்குள் போச்சுன்னு தெரியுமா” என்று கேட்டாளாம். ”தெரியவில்லை சொல்” என்று என் மனைவி சொன்னதற்கு. “மழை பேயுது வீட்டுக்கு உள்ளே வான்னு அவங்க அப்பா கூப்பிட்டாராம். அதான் அந்த நிலா வீட்டுக்குள் போயிடுச்சுன்னு” சொன்னாளாம். ”அம்மா எங்கே” என்று என் மனைவி கேட்ட்தற்கு. “உள்ளே சமைச்சுகிட்டு இருக்காங்க”ன்னு சொன்னாளாம்.

இதை நேற்று அவளது சித்தியிடம் சொன்னாராம் என் மனைவி. அவளது சித்தி “இன்னைக்கி நிலா தெரியுதேன்னு” கேட்டாராம். அதற்கு பதிலாக “ இன்னைக்கு அதோட அப்பா வெளியே நின்னு வேடிக்கை பாருன்னு சொல்லிட்டாராம்” என்று சொல்லியிருக்கிறாள்.

நிலவை குழந்தையாகவும், மேகத்தை வீடாகவும் பார்க்க யார் அவளுக்கு கற்று தந்தார்கள்.

இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.

மீண்டும் அவளை சொல்லச் சொன்னால். “அப்படி இல்லப்பா அது. அந்த நிலா வீட்டுக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்துதா. அந்த மேகம்தான் அவங்க அப்பா. அவர் வந்து நிலாவை வா வீட்டுக்கு போகலாம்னு கூட்டிகிட்டு போயிடுச்சு” என்று புது விளக்கம் சொல்கிறாள். மேகமில்லாத மறுநாளுக்கான கதையை கேட்டால் “நேத்துதான் வேடிக்கை பார்க்கலையே இன்னைக்கு பார்த்துக்கோன்னு நிலாவோட அப்பா மேகம் விட்டுடுச்சு”ன்னு விளக்கம் கூறுகிறாள்

குழந்தைகளை எண்ணி வியப்பதா... இல்லை அவர்களை ரசிப்பதா... இல்லை அவர்களிடம் இருந்து கற்று கொள்வதா...

Monday, 18 July 2011

அர்த்தமில்லாத விளக்கங்களில்


அர்த்தமில்லாத விளக்கங்களில்
நுழைந்து வரும் வாக்கியங்கள்..
உணர்ச்சியற்ற எண்ணங்களில்
குடிபுகுந்த வார்த்தைகள்..
ஏதுமறியா நிலையினிலே
வலுவிழந்த எழுத்துக்கள்..
எங்களை
அனர்த்தனமாக்கும் முன்
அர்த்தமாக்கிக் கொள்கிறோம்

இங்கே வீரியம் அதிகம்


பிறப்புறுப்பு விலக்கி
தலைகுப்புற விழ
தின்னம் கொண்ட என்னால்
நெல் உமியின்
கூர் மழுங்கச் செய்ய முடியவில்லை....
சீமை பால்
சுரக்கச் செய்ய
வல்லமை படைத்த எனக்கு
எருக்கம் பாலின்
விஷம் முறிக்கத் தெரியவில்லை...
உறவாகிப் போன
யாருக்காவது கேட்கிறதா
அழுகையாகிப்போன என் உறுமல்...
என் உயிருக்கு காரணமானவனே
உன்னை தப்பாமல்
அமுது மொழியில்
அப்பா என்றழைப்பேன்
உன் சோகம் தீர
என் வெள்ளை சிரிப்பு
உன் தாயிடம்
நீ இழந்த முத்தங்கள்
என்னால் மட்டும்தான் தர முடியும்
என் பிஞ்சுக் கைகளின் அணைப்பில்
அமைதி கொடுப்பேன்
என்னை இந்த கூட்டில்
விட்டுவிடுங்கள்...
நான் பட்டுப் பாவாடை கேட்க மாட்டேன்
சமைஞ்ச நேரத்தில்
சீர் ஏதும் கேட்க மாட்டேன்
கல்யாணம் செய்யும்
அவசியமும் தரமாட்டேன்
காதல் என் மோகத்தை தீர்க்கட்டும்
என் உயிரை
என்னோடு விட்டுவிடுங்கள்...
இங்கே வீரியம் அதிகம்
என்னை கொல்லாதீர்கள்

Friday, 8 July 2011

ஆதியும் அந்தமும்


ஆதியும் அந்தமும் இல்லாமல்
அந்தரத்தில் ஒரு தள்ளாட்டம்...
முதலுக்கும் முடிவுக்கும்
நடுவே ஒரு போராட்டம்.....
காற்றில்லாத வனாந்தரத்தில்
யாருமில்லாத ஆரவாரம்.....
வட்ட வட்டமாய் வளையங்களும்
நீண்டு கொண்டே போகும் பாதைகளும்
எங்கே இட்டுச் செல்கின்றன......
வேலும் வில்லும் காக்கவில்லை
அறையப்பட்ட ஆவி தோன்றவில்லை
ஒருவரேயானாலும் ஏதும் நடக்கவில்லை....
வராத மழைக்காக
கருகிப் போகும் நாற்றாங்கால்கள்

Tuesday, 5 July 2011

வலிக்கிறது எனக்கு


உயர உயர என் மீது
வாய் பிளந்து
நான் பார்த்திருக்கையில்
என் அடி வயிற்றில்
வேகமாய் இறங்கும்
இந்த இயந்திரங்கள்
வலிக்கிறது எனக்கு...
என் அருமை பிள்ளையே
என்னதான் இன்னமும் தேடுகிறாய்
என்னுள்
என் வயிற்றுக்குள்...
தண்ணீர் கொடுத்தேன்
கணிமங்கள் கொடுத்தேன்
எரிபொருள் கொத்தேன்
எரிவாயுவும் கொடுத்தேன்
இன்னமும் எத்தனை
ஓட்டைகள் போடுவாய்
இன்னமும்
எத்தனை பெரிதாய்     
எத்தனை ஆழமாய்
என்னை கிழிப்பாய்
நீயும் என் பிள்ளைதான்...
நீ வசிக்கத்தான்
இத்தனை பெரிய
கூடு கொடுத்தேன்
என்னை தோண்டித்தான்
வீடு கட்ட வேண்டுமா...
உன் கை கொண்டு கிழுத்தவரை
உன் தீண்டலின்
சுகமாவது மிஞ்சியது
இந்த ராட்சஸ
இயந்திரங்களின்
கீரல்களும் உராய்வுகளும்
வலிக்கின்றன...
எல்லா உயிர்களும்
என் பிள்ளைகள்
அவர்களுடையதும் அவர்களும்
உனக்கே வேண்டும் என்பது
நியாயமா...
அடேய்
என்னுள்ளும் கோபம் இருக்கிறது
இனியும் ஆழம் வேண்டாம்
சாம்பலாகி விடுவாய்
அமைதியாய் ஓடும்
இரத்த குழம்புகள்
வெடித்துவிடுவேன்
எரிமலையாய்...
உன்னை விட
என் எரிமலைகளுக்கு
பாசம் அதிகம்

Saturday, 11 June 2011

உணர்வுகளை கழட்டி


இன்று கொள்ளி வைத்து
நாளை பால் ஊற்றி
பதினைந்தாம் நாள் காரியம் செய்து
வருடம் ஒன்று ஆனதும் திதி கொடுத்து
அம்மாவாசைதோறும் பிண்டம் வைக்கும்
சராசரி தமிழன் நான்...
எனக்காக உடல் கிழித்த
உதிரம் ஊட்டிய
என் அன்னைக்கே
இவ்வளவுதான் செய்ய முடியும்
என் தொப்புள்கொடி உறவுகளுக்கு மட்டும்...
கொத்து கொத்தாய் கொன்றான்
என் இனப் பெண்டுகள்
சிதைக்கப்பட்டனர்
எங்குப் பார்க்கினும்
உடல்களும் சதைகளும் உதிரமும்
சிதறிக் கிடக்கின்றன
எல்லாம் முடிந்த பின்னும்
துன்பங்கள் தீரவில்லை
கேள்விகளும் முடியவில்லை..
எல்லாம் தெரிகிறது
வருத்தங்கள் தொடர்கிறது
கோபமும் தெரிக்கிறது
வழிதான் தெரியவில்லை...
எனது இறப்பிற்கே
என்னால்
இறங்கற்பா மட்டும்தான் பாட முடிகிறது...
என் கையை வெட்டினாலுமே
சிரித்து சகித்து வாழ
பழக்கப்பட்டிருக்கிறோம்
ஈழத்து உறவின் ஆவிகளே
மிச்சமிருக்கும் தண்டிக்கப்பட்டவர்களே
நான் வாழ்வதே
ஒரு அடிமை வாழ்க்கை...
உணர்வுகளை கழட்டி
உறையில் வைத்துவிட்டு
உடல் வளர்க்க கிளம்பிவிட்டேன்....