Friday, 11 November 2011

எனது கீச்சுகள் - 2

எட்டி எட்டி பார்த்துவிட்டு போகும் உன் நினைவுகள் உன்னை என்னிடம் மீண்டும் கூட்டி வந்து விட்டு விட்டு போகிறது...

குடும்பத்தின் சின்ன சின்ன சந்தோஷங்களை துறந்து குடும்பத்திற்காக பணம் பண்ணும் இயந்திரமாக மட்டுமே மாறிப் போன துர்பாக்கியசாலிகள் ஆண்கள்...

எழுதிவிட்டு மீண்டும் படித்து பார்க்கின்றேன்... எத்தனை முறை முயன்றாலும் உன்னைவிட அழகாக ஒரு கவிதையை என்னால் எழுத முடியவில்லை...

நீ என்னுடன் இல்லாத வேளைகளில் மட்டும் உறக்கக் கத்திவிட்டு கல்லறையில் போய் படுத்துக்கொள்ள வரம் வேண்டும்..   

முத்தத்தின் வழியே முழுதாய் என்னை விழுங்கிப் போகின்றாய் என் ராட்சசியே...

ஓவென்று வாய்விட்டு ஒரு அழுகை... பிறகு நல்ல தூக்கம்... துக்கமோ பாரமோ என்னை தாக்கும்போதெல்லாம் எனக்கு கை கொடுக்கும் இருவர்...   

நான் மட்டும் போதும் எனக்கு... நான் என்னை கை பிடித்து முன்னெடுத்து செல்கின்றேன்...

வளைவுகளில் விழுந்து வீழ்த்துகிறேன்...  

போர்வைக்கு வியர்க்கிறது.. 

Thursday, 10 November 2011

எனது கீச்சுகள் - 1

கனவுகள் அங்கே பாய் விரித்து காத்திருக்கின்றன... நான் வந்து இமை மூட வேண்டுமாம்...


என்னை விட்டு யார் போனாலும் நான் கவலை கொள்ளப் போவதில்லை... நீ என்னை விட்டு போன வலி என்னோடு இருப்பதனால்...

உனக்கு எப்படியோ தெரியாது... எனக்கு உன் பெயர்தான் மிகவும் இனிமையான வார்த்தை... உன் பெயர் கொண்டவர்களை என் தோழிகளாக்கி கொள்கின்றேன்...

உயிர்த்தெழும் நேரங்களில் எல்லாம் உன் மூச்சுக் காற்றுதான் எனக்கு சுவாசம் தருகிறது...

நிகழ்காலத்துக்குள் ஓடி வந்துவிடுங்கள்.. எதிர்காலத்துக்குள் நுழைந்த உங்களை கொல்ல அந்த காலன் துரத்தி வருகிறான்...

ஆண்கள் சோகங்களை சொல்வதில்லை பெண்கள் சொல்லாமல் விடுவதில்லை.. 

அடங்கிப் போகக்கூடாது என்றால் அத்துமீறுவது அன்று அர்த்தமோ இன்றைய பெண்களுக்கு... மன்னிக்கவும் வருத்தமாக இருக்கிறது...

கூண்டில் அடைக்கப்பட்டவைகள்தான். இருந்தாலும் அந்த குருவிகளின் கீச்சுகள் இனிமையாகத்தான் இருக்கின்றன. பாடுகின்றனவா, அழுகின்றனவா, திட்டுகின்றனவா     

மழையில் நடக்கத்தான் வெளியே வந்தேன். நீங்கள் வாரி இரைக்கும் சேற்றில் குளிக்க அல்ல... வாகன ஓட்டிகளே கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்...

கையில் குடை இருக்கிறது.. இருந்தும் மழையில் நனைந்துகொண்டே நடக்க சொல்கிறது மனது...  

Friday, 4 November 2011

உருக்குலைந்து போனாயோ


அடி வயிற்றில்
உயிர் போகும்
அந்த ஒற்றை வலி...

ஐயோ மகளே
கரைந்து போனாயோ
பதினைந்து நாள் கனவு
கலைந்து போனாயோ
ஒழுகும் உதிரம் வழியே
உருக்குலைந்து போனாயோ
மசக்கையின் மயக்கமே தெளியவில்லை
மாயமாய் போனாயோ
வயிற்றை தடவுகிறேன்
இல்லாமலேயே போனாயோ...

அத்தனையும் இனிமையாய்
என்னை பார்த்து புன்னகைத்தன
அழகாய் தெரிந்தன...

கனவுகள் பல
உன்னை உள்ளே கொண்டு
பல தூரம் சென்றன
உனக்கான முதல் முத்தம்
நீ தூங்கும் அழகு
பேசும் மழலை மொழி
வளரும் அழகு
அத்தனையும் இன்னமும்...

வேண்டும் என்றுதானே
வரம் கேட்டேன்
நான் வேண்டாம்
என்றோ
என்னை விட்டு போனாய்...

தாய்மை என்ற இனிமையின்
திமிர் இல்லாமல் போனது...

எனது உயிர்
என்னுள் விதைத்த உயிரே
என்னை வெறுத்தாயோ...

செய்வது அறியாமல்
ஏதும் செய்ய தோன்றாமல்
தொப்புள் கொடி உறவு அறுந்து
மல்லாந்து படுத்திருக்கிறேன்
நீ போன பாதை பார்த்து...

மனசதின் வலி
அதிகமாய் இருக்கிறது...

உனக்கான
எனது காத்திருத்தல்
மீண்டும் ஆரம்பம்...


Friday, 28 October 2011

அதோ இறந்து கிடக்கும் என்னை


அதோ இறந்து கிடக்கும் என்னை
எட்டி நின்று பார்க்கின்றேன்
ஏதும் புரியாமல்
என் புன்னகை மட்டும் மாறாமல்
எல்லோரும்
என்னை சுற்றி
ஒப்பாரிகள்
அதோ
என்னை பெற்றவர்கள்
அழுகையூடே
தங்களின் பாசத்தை புலம்பிக் கொண்டு
மாறாத என் புன்னகை
மெல்லக் கரைகிறது
திக்குத் தெரியாமல்
மூலையில் என்னவள்
என்ன செய்வாள் இனி
நான் தூங்குவதாய்
சிணுங்களோடு சிரித்துகொண்டே
என்னை எழுப்புகிறாள்
என் தாயான
என் மகள்
அத்தனை புன்னகையும்
காணாமல் போனது
அதோ இறந்து கிடக்கும்
என்னை பார்த்து
நான் அழுகிறேன்
  
முன்னர் பல முறை
நான் இறந்திருக்கிறேன்
என் சுயம் இழந்த
ஒவ்வொரு முறையும்
நான் இறந்துபோயிருக்கிறேன்
அத்தனை முறையும்
என்னோடு நான் இருந்தேன்
மீண்டும் புதிதாய் பிறந்தேன்...

இது நான் தனியாக
என்னை அங்கே விட்டுவிட்டு
இது நிரந்தரம்
நிஜம் சுடுகிறது...

முடிந்தே விட்டது
அத்தனை பலத்தையும்
ஒன்றாய் சேர்த்து
விழித்து எழுகின்றேன்
தட்டி எழுப்புகிறாள்
என் தாயானவள்
அத்தனை கனவும் கலைந்து
நிஜம் எதிரில் நிற்கிறது
நான் சிரிக்கின்றேன்
வெல்வேன் இனி
இறப்பின் வலி அறிந்தவனாய்...

Thursday, 13 October 2011

அந்த வெள்ளை காகிதங்களில்


ஏதேதோ எண்ணங்கள்
எங்கெங்கோ பறந்து சென்று
அங்கங்கே ஒட்டிக் கொண்டு
மீண்டும் எடுக்க வராமல்
பிசினி போல...

நிலையற்ற வாழ்வு
நிறைய வலியோடு
முடித்து கொள்ளலாம் என்றால்
கடமைகள் பல
வரிசையில் வந்து
இழுத்து பிடித்து
முடிவுக்கும் வழியில்லாமல்...

காலன் வருவதற்குள்
படித்து முடித்துவிட வேண்டும்
எனற அவசரத்தில்
வேகவேகமாய் புரட்டுகின்றேன்
என் வாழ்க்கை பக்கங்களை...

நாற்பது வருட கடமைகளை
நாலு நிமிடத்தில் படித்து
நாலு மணி நேரத்தில்
செய்தும் முடித்து
நிம்மதியாய்
படுத்து உறங்க
வழி தேடுகின்றேன்...

என் காலப் பக்கங்களில்
அவசரத்தில் கிறுக்கப்பட்டவை
காலியாக இருக்கின்றன
செய்வதறியாமல்
அந்த வெள்ளை காகிதங்களில்
புதையுண்டு
செயலற்று நிற்கின்றேன்...

சீக்கிரம் என்கிறான் காலன்
முடியாது என்கிறது காலம்
நடுவில் நான்
தேங்கிப்போய்...