Sunday 24 April 2011

நீண்டு கொண்டே போகும் பாதை

நீண்டு கொண்டே போகும் பாதை 
அந்த வனாந்தர இருளில் 
நான் மட்டும் தனியாய் 
மனதில் சுமையோடும் 
கண்ணில் கண்ணீரோடும் 
நடக்கிறேன் நடக்கிறேன் 
நடந்து கொண்டே இருக்கிறேன் 
முடிவில்லாத பயணங்கள் 
காரணமில்லாத எண்ணங்கள் 

சுற்றித் துழாவிப் பார்கிறேன் 
பற்றுதலுக்கு 
ஒரு கை கிடைக்குமா என்று 

நான் கை கொடுத்தவர்கள் 
ஏறிப் போக
இந்த இருளில் 
ஆழமாய் மூழ்கிப் போனேனோ 
இங்கே யாரும் இல்லையோ 

இந்த 
கண்ணீர் துளிகள் வேறு 
என்னை மூழ்கடிக்க 
காத்திருக்கின்றன 

தவறுகளும் 
தோல்விகளும் 
பயத்தை சொல்ல 
மூச்சுக் காற்றுக்காக 
நான் ஓடுகிறேன் 
எங்கேனும் ஒரு மூலையில்
இருக்காதா எனக்கான இளைப்பாறல் 

யாரோ உலுக்கி எழுப்ப 
மழை சாரல் தாங்கிய 
தென்றல் காற்று 
இதமாய் முகம் வருடுகிறது 

கண்விழித்தால் 
கண் கொள்ளும் பசுமை எங்கும் 
சித்திரையில் 
மூன்று நாள் மழை 
உற்சாக வெள்ளத்தில் என் பூமி 
பச்சை பசேலென எங்கும் சிலிர்த்துக் கொண்டு 
வாடா மல்லியும் 
கனகாம்பரமும் 
அழகு கூட்ட 
எல்லாம் இனிமையாய் 
அந்த இருளின் 
சுவடே இல்லாமல் 

கண நேரம் கூட 
கண் மூட தோன்றவில்லை 
அத்தனையும் என்னுள் வாங்கி 
இருத்தி கொள்கின்றேன் 

எங்கே என்னை உலுக்கிய கைகள் 
தேடுகின்றேன் 

ஆனந்தமாய் 
இமைகள் மூட
அந்த இருள் 
என்னை விட வேகமாய் 
என் பின்னே 
என்னை மீண்டும் தீண்டுமா 
இல்லை 
அந்த கைகள் 
என்னை அள்ளிக் கொள்ளுமா

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

இளைப்பாறல் கொள்ளும் காலம் விரைவில்.

பாதையில் பயணிக்கச் செய்த வார்த்தைகள் அருமை.

Post a Comment